இயற்கை விவசாய திராட்சைக்கு கூடுதல் விலை
|
அ.ஜானகிராமன்
சிறுமலை
திண்டுக்கல் மாவட்டம்,
தொடர்புக்கு 91500 09998 |
|
பொதுவாக திராட்சை சாகுபடியில் புழு தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனால் அவற்றிற்கு கண்டிப்பாக பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க வேண்டும், இல்லாவிட்டால் மகசூல் பாதிக்கும் என்பது பெரும்பாலான விவசாயிகளின் எண்ணம். இதை பொய்ப்பிக்கும் வகையில் மதுரையை சேர்ந்த அ.ஜானகிராமன், திண்டுக்கல் சிறுமலை அடிவாரத்தில் இயற்கை முறையில் திராட்சையை சாகுபடி செய்துள்ளார். இவர் திராட்சையை 3 ஏக்கரில் பயிட்டுள்ளார். இயற்கை உரமாக "ஜீவாமிர்தம்,' "பஞ்சகாவ்யத்தை' பயன்படுத்துகிறார். பூச்சித்தாக்குதல் இருந்தால் "அக்னி அஸ்திரத்தை' தெளிக்கும் அவர், பூக்கும் சமயத்தில் தேங்காய்பால், புளித்தமோர் கரைசலை பயன்படுத்துகிறார்.
ஆண்டுக்கு 3 முறை திராட்சை அறுவடை செய்கிறார். ஒவ்வொரு முறையும் 5 டன் கிடைக்கிறது. ஒரு கிலோ ரூ.50 க்கு விற்கிறார். அவற்றை சென்னை பசுமை அங்காடிகளுக்கு அனுப்புகிறார். இன்னும் 5 ஆண்டுகளில் குஜராத்தை போல் ஒரே அறுவடையில் ஏக்கருக்கு 18 டன் எடுப்பதே லட்சியம் என்கிறார்.விவசாயி ஜானகிராமன் கூறியதாவது: இயற்கை விவசாயத்தில் திராட்சை சாகுபடி செய்தால் நஷ்டம் ஏற்படும் என பலர் எச்சரித்தனர். அவர்களது பேச்சில் உடன்பாடில்லை. இயற்கை விவசாயத்தில் திராட்சை மட்டுமல்லாது மா, பப்பாளி, தென்னை, வாழை போன்றவை சாகுபடி செய்துள்ளேன். ஒரு ஏக்கரில் திராட்சை சாகுபடி செய்ய ரூ.2 லட்சம் செலவாகும்.
ரசாயன உரம் பயன்படுத்தினால் ஒரே அறுவடையில் ஏக்கருக்கு 7 டன் கிடைக்கும். ஆனால் கிலோ ரூ.20 க்கு தான் விற்க முடியும். எங்களுக்கு முதல் ஆண்டு ஒரே அறுவடையில் 3.5 டன் திராட்சை கிடைத்தது. 3 ஆண்டு முடிந்தநிலையில் 5 டன் கிடைக்கிறது. திராட்சையை ஒரு முறை கவாத்து செய்தால், 4 மாதங்களுக்கு பின்பே அறுவடைக்கு வரும்.மூன்று ஏக்கரையும் ஒரே மாதிரி கவாத்து செய்தால், ஒரே நேரத்தில் மகசூலுக்கு வரும். இதனால் அவற்றை அறுவடை செய்து விற்பதில் சிரமம் ஏற்படும். எனவே எந்நேரமும் திராட்சை அறுவடை செய்வது போல் கவாத்து முறையை மாற்றியுள்ளோம். ஒவ்வொரு ஏக்கரையும் வெவ்வேறு மாதங்களில் கவாத்து செய்கிறோம். இயற்கை விவசாயத்தில் விளைந்த திராட்சையை விதையுடன் சேர்த்து உண்டால் புற்றுநோய் அண்டாது, என்றார்.
|